திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் தெப்பத்திருவிழா இன்று துவக்கம்

திருவாரூர், மே 20: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா இன்று துவங்குவதையொட்டி ஆர்.டி.ஒ மற்றும் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் தலைமையில் நேற்று முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெற்று முடிவுற்ற நிலையில் தெப்ப திருவிழா இன்று (20ம் தேதி) துவங்கி நாளை (21ம் தேதி) மற்றும் நாளை மறுதினம் (22ம் தேதி) என 3 நாட்கள் நடைபெறுகிறது.

நாள் ஒன்றுக்கு 3 சுற்றுகள் வீதம் மாலை 6 மணியளவில் துவங்கும் இந்த தெப்ப திருவிழா மறுநாள் காலை 6 மணி வரையில் என தொடர்ந்து 12 மணி நேரம் வரையில் விழா நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த தெப்பமானது இரும்பு பேரல்கள், மூங்கில் மற்றும் பலகை கொண்டு உருவாக்கப்படும் நிலையில் இதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று விழா துவங்குகிறது. இதனையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் நேற்று ஆர்டிஒ அலுவலகத்தில் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் தலைமையிலும், ஆர்.டி.ஒ பாலசந்தர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், கமிஷனர் பிரபாகரன், நகராட்சி நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் கவிதா, மின்துறை செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி, உதவி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தெப்ப திருவிழாவையொட்டி திருவாரூர் நகர் முழுவதும் போலீசார் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும், தெப்பம் அருகில் தீயணைப்பு துறை சார்பில் படகுடன் பாதுபாப்பு பணியில் தயார் நிலையில் 4 கரைகளிலும் இருக்க வேண்டும், மருத்துவதுறை சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளில் உரிய மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், போக்குவரத்து துறை சார்பில் உரிய பேருந்து வசதி செய்வதுடன் மின்துறை சார்பில் தடையில்லா மின்சாரம் சீரான முறையில் வழங்கிட வேண்டும் என்று அந்தந்த துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: