மே 25 வரை ஆர்டிஇ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

புதுக்கோட்டை, மே 20: மே 25ம் தேதி வரை ஆர்.டி.இ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் சேர்க்கைக்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 20 முதல் மே 18 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்பொழுது மே 19 முதல் மே 25 வரை 7 நாட்களுக்கு விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர் தகுதியில்லாத விண்ணப்பதாரர் விவரம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் பள்ளித் தகவல் பலகை மற்றும் இணையதளத்தில் மே 28ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

தகுதியான விண்ணப்பங்கள் 25% ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக இருந்தால் மே 30ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் விண்ணப்ப எண் மற்றும் பள்ளியில் தகுதியுள்ள ஒரு பிரிவுக்கு 5 மாணவர்கள் என்ற விதத்தில் (வரிசை எண்ணிட்டு) காத்திருப்பு பட்டியலுக்கான மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றை பள்ளித் தகவல் பலகை மற்றும் இணையதளத்தில் மே 31ம் தேதி வெளியிடப்படும் என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: