எஸ்பி அறிவுறுத்தல் ஊட்டி மலர் கண்காட்சியை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு 1500 போலீசார் நியமனம்

ஊட்டி, மே 20: மலர் கண்காட்சியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் வெளி மாவட்ட போலீசார் 1500 பேர்  நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை சீசன் போது, அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இது போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கும்.

அதேபோல், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு கும்பல் வர வாய்ப்புள்ளது.

இதைத்தடுக்க கூடுதல் போலீசார் நியமிப்பது வழக்கம். இம்முறை மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 1500ம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்ட காவல்துறை,  தமிழ்நாடு சிறப்பு காவல்துறையினர், ஊர்காவல் படையினர், போக்குவரத்து பாதுகாவலர்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, சிறப்பு காவல் படையை சேர்ந்த போலீசார், ஊர்க்காவல் படை, போக்குவரத்து காவலர்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

இதுதவிர, ஊட்டிக்கு வரும் வாகனங்கள் தங்கு தடையின்றி வந்து சேர பர்லியார் முதல் ஊட்டி வரையிலும், குஞ்சப்பனை முதல் ஊட்டி வரையிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.

இவர்களை பிடிக்க சுற்றுலா பயணிகள் போல் ஆண், பெண் போலீசார் சீருடையில்லாமல் பணியில் இருப்பார்கள். அதேபோல், சுற்றுலா தலங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தங்கு தடையின்றி அனைத்து சாலைகளிலும் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சில சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், நகருக்குள் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க அங்காங்கே வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்கள் மற்றும் பார்க்கிங் தலங்களுக்கு செல்ல ஏற்றவாறு வழிகாட்டி பலகைகளும் அங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: