தமிழகம் 6 கிமீ தூரத்துக்கு அதிக சத்தத்துடன் நச்சுப்புகை வெளியேற்றும் காகித ஆலை; கால்நடைகள் பாதிப்பு; வன விலங்குகள் இடம் பெயர்ந்தன

சத்தியமங்கலம்,  மே 20:  சத்தியமங்கலம் அருகே புதுப்பீர்கடவு ஊராட்சியில் தனியார் காகித ஆலை  இயங்கி வருகிறது. சிறிய அளவில் இயங்கி வந்த இந்த ஆலை தற்போது  விரிவுபடுத்தப்பட்டு நாளொன்றுக்கு 600 டன் பேப்பர் உற்பத்தி செய்யும்  வகையில் ராட்சத இயந்திரங்கள் நிறுவப்பட்டு அதில் 100 டன் கொள்ளளவுள்ள  கொதிகலன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும்  யூனிட் நிறுவப்பட்டுள்ளது. தற்போது, புதிதாக விரிவுபடுத்தப்பட்டு உள்ள மெகா  யூனிட் சோதனை முறையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள 100 டன் கொள்ளளவு கொண்ட கொதிகலன் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தினமும்  மூன்று அல்லது நான்கு முறை கொதிகலனில் இருந்து நச்சுப்புகை  வெளியேற்றப்படுகிறது. அதுபோன்ற சமயங்களில் இந்த தொழிற்சாலையை சுற்றி 6 கிமீ  சுற்றளவுக்கு காதுகிழியும் வகையில் அதிக இரைச்சல் ஒலியை எழுப்புவதோடு,  கொதிகலனில் இருந்து அதிகப்படியான வெள்ளை நிற நச்சுப்புகை வெளியேறி காற்றில்  கலக்கிறது. அப்போது, விவசாய தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆடு, மாடு,  எருமை உள்ளிட்ட கால்நடைகள் இரைச்சல் சத்தம் கேட்டு ஓட்டம் பிடிப்பதாகவும்,  தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் துர்நாற்றம்  வீசுவதாகவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும்,  தொழிற்சாலையை ஒட்டி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட  பவானிசாகர் வனப்பகுதி அமைந்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து  வெளியேற்றப்படும் அதிகப்படியான நச்சுப் புகையினால் ஏற்படும் துர்நாற்றம்  மற்றும் அதிக இரைச்சல் சத்தம் காரணமாக வனப்பகுதியில் வசிக்கும் யானை, புலி,  சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் பல கிலோ மீட்டர்  தூரத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டதாக வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இத்தொழிற்சாலை  இயக்கப்படுவதால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்க வாய்ப்பு  உள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில்  உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்  தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள்  மற்றும் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: