ஆட்டோமொபைல், பம்ப் மோட்டார் தொழில்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியம் அளிக்க வேண்டும்

கோவை, மே 20:  தமிழக அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் ஆட்டோமொபைல், தோல் தொழிற்சாலைகள், மின்சாதன உதிரிபாகங்கள், பம்ப் மோட்டார், ஜவுளி இயந்திர பாகங்கள் தயாரிப்பாளர்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும் என கொடிசியா சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக கொடிசியா தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாஸ்டர் பிளான் வெளியீடு விரைவுப்படுத்த வேண்டும். கட்டிடங்களுக்கு முறையான அனுமதி பெறுவதை விரைவுப்படுத்த ஒற்றைச்சாளர அனுமதி முறை அறிமுகப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய தொகையை விரைவாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் ஆட்டோமொபைல், தோல் தொழிற்சாலைகள், மின்சாதன உதிரிபாகங்கள், பம்ப் மோட்டார், ஜவுளி இயந்திர பாகங்கள் தயாரிப்பாளர்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும்.

 

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் அனைத்து சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித பிணையுமின்றி கடன் உதவி வழங்க வேண்டும். புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும். விவசாயம் சார்ந்த நடவடிக்கைக்கு கடன் வழங்க வேண்டும். வாட், நுழைவு வரி தொடர்பாக சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் முறையை நிறுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். சூலூரில் 400 ஏக்கர் நிலத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த தொழில்பூங்கா ஏற்படுத்தும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்தை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: