6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை முதல் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்

ஈரோடு, மே 20: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அமுதவல்லி தலைமை வகித்தார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.

இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அமுதவல்லி பேசியதாவது: 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ வசதியுடன், சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே 21ம் தேதி) முதல் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே, இம்முகாமை பயன்படுத்தி பொது மக்கள் தங்கள் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்ய அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களை அணுகி தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை தெரிந்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் பூங்கோதை மற்றும் மாவட்ட திட்ட அலுவலர், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், ஆர்.பி.எஸ்.கே.மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: