திருத்தணி ஆர்.கே. பேட்டையில் நீர்ப்பாசன தலைவர் - ஆட்சி மண்டல உறுப்பினர் தேர்தல்: இன்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்

திருத்தணி: திருத்தணி ஆர்.கே. பேட்டையில் நீர்ப்பாசன தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர் தேர்தல் வருகின்ற 25ம் ேததி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இன்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி தாலுகாவில் 8 ஏரி, ஆர்.கே.பேட்டை தாலுகாவில் 9 ஏரி, பள்ளிப்பட்டு தாலுகாவில் 7 ஏரிகள் என மொத்தம் 24 ஏரிகளுக்கு நீர்ப்பாசனம் பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற 25ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு ஏரிக்கும் ஒரு தலைவர் என்ற அடிப்படையில், 24 பேரும் ஒரு ஏரிக்கு 4 முதல் 10 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் என மொத்தம் 122 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான, வேட்பு மனு திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்டது.

திருத்தணி தாலுகாவில், 8 பேர் தலைவர் பதவிக்கும், 46 பேர் ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு,  46 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆர்.கே.பேட்டை தாலுகாவில், 9 தலைவர் பதவிக்கு, 12 பேரும், 44 ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு 54 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பள்ளிப்பட்டு தாலுகாவில் தலைவர் பதவிக்கு 7பேரும், 32 ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு 32 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாவில், தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்.கே.பேட்டையில் மட்டும் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நிற்கும் வேட்பாளர்களை சமரசம் செய்து போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.  இதனை தொடர்ந்து இன்று வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள். இதில் தலைவர், ஆட்சி மண்டல உறுப்பினர்கள் வாபஸ் பெற்றால் தேர்தல் நடைபெறாது. தவறும் பட்சத்தில், வருகின்ற 25ம் தேதி தேர்தல் நடைபெறும்.

Related Stories: