திருடுபோன முனீஸ்வரன் சிலை மீட்பு: கிணற்றில் வீசிய மர்மநபர்களுக்கு வலை

செய்யூர்: செய்யூர் அருகே, கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் இருந்தபோது, திடீரென திருடுபோன முனீஸ்வரன் சிலை, அங்குள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செய்யூர் ஊராட்சி மேற்கு செய்யூரில் உள்ள ஏரிக்கரை அருகே ஆலமரத்தடியில் அக்கிராம பொதுமக்கள் சார்பில்  முனீஸ்வரன் கற்சிலை கடந்த 2 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக கோயில் அருகில் வைக்கப்பட்ட சிலை, இரவோடு இரவாக மர்மநபர்களால் திருடி சென்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள், செய்யூர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் சார்பில், எஸ்பியிடம் திருடுபோன சாமி சிலையை கண்டு பிடித்து தரும்படி புகார் மனு அளித்தனர். இதையடுத்து, எஸ்பி உத்தரவின்படி, போலீசார் திருடுபோன சிலையை தேடி வந்தனர்.

இந்நிலையில், முனீஸ்வரன் கோயிலின் அருகே உள்ள கிணற்றில், இளைஞர்கள் சிலர், நேற்று சிலையை தேடினர். அப்போது, சிலை கிணற்றில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீசார் முன்னிலையில் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி கிரேன் மூலம் சிலை பத்திரமாக மீட்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சிலையை கிணற்றில் வீசி சென்ற மர்மநபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: