மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி காட்டேஜ்களில் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஊட்டி, மே 19: ஊட்டியில் உள்ள காட்டேஜ்களில் அறை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு தங்குவதை தவிர்த்து புறநகர் பகுதிகளை தேடி செல்கின்றனர். ஊட்டியில் ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில், முக்கிய நிகழ்ச்சி மலர் கண்காட்சி. இதனை காணவே பல லட்சம் சுற்றுலா பயணிகள் ஆண்டுதாறும் மே மாதம் ஊட்டிக்கு வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் நாளை மலர் கண்காட்சி துவங்கி 24ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு இங்குள்ள பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் அறைகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் ரூ.800 முதல் 1500 வரை வசூலிக்கப்படும். தற்போது ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் ஆன்லைன் மூலமே புக்கிங் செய்யப்படுவதால், இதனை வசதி படைத்தவர்கள் முன்னதாகவே புக்கிங் செய்துள்ளனர். இதனால், நேரடியாக வந்து ஓட்டல்களுக்கு சென்று அறைகளை கேட்டால், அறைகள் இல்லை என கூறுவது மட்டுமின்றி, அதிக கட்டணம் கொடுத்தால் மட்டுமே அறைகள் கிடைக்கும் என சில லாட்ஜ் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளன. அதே போல், பெரும்பாலான ஓட்டல்களில் சாதாரண நாட்களில் உணவிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க நினைத்தாலும், தற்போது ஊட்டியில் லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களின் அறை கட்டண உயர்வு, ஓட்டல்களில் உணவு கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் மன நிம்மதியோடு சுற்றுலாவை அனுபவிக்க முடிவதில்லை என்ற புகார் உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் லாட்ஜ், காட்டேஜ் மற்றும் உணவு விடுதிகளில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதை தடுக்க ஒரு குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்தது. இதனால், ஓரளவு கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால், இம்முறை லாட்ஜ், காட்டேஜ் மற்றும் ஓட்டல்களை கண்காணிக்க சிறப்பு குழு எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால், கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், விவரம் அறிந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தற்போது ஊட்டியில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர். புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் பல பகுதிகளிலும் துவக்கப்பட்டுள்ள காட்டேஜ்களுக்கு செல்கின்றனர். சிலர், மேட்டுப்பாளையத்தில் தங்கிவிட்டு ஊட்டி வந்து செல்கின்றனர். சிலர் காலையில் வந்து மாலை நேரங்களில் திரும்புகின்றனர். இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை நம்பியே தொழில் செய்து வரும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். கட்டண உயர்வை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: