கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்

ஈரோடு, மே 19: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மாநாடு நடத்தி, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தனர். கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு  திருப்பூர் மாவட்ட எல்லையான திட்டுப்பாறையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கீழ்பவானி பாசன நலச் சங்க செயலாளர் ஏ.கே.எஸ்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

திமுக சுற்றுச் சூழல் அணி மாநில செயலாளரும், காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனருமான கார்த்திகேய சிவசேனாதிபதி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, கீழ்பவானி பாசன நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி, தமிழக விவசாய சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை இயக்க நிர்வாகி பொடாரன், ஐக்கிய விவசாயிகள் சங்க நிர்வாகி சண்முகம் மற்றும் மறவபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில், திரளான பெண்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: