ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஆண்டிபட்டி, மே 19: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானி சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோப்புபட்டி பகுதியில் உள்ள நாகலாறு ஓடை பகுதியில் ஒரு டிராக்டரில் அனுமதியின்றி சிலர் சரளை மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த ராஜதானி போலீசார், டிராக்டரின் உரிமையாளர் ராஜதானியை சேர்ந்த தெய்வமுத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல கனிமவளத்துறை அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலான அதிகாரிகள் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தையகவுண்டன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு உப்போடை பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த சித்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரையும், மணலுடன் கூடிய டிராக்டரையும் பறிமுதல் செய்து, ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: