×

9 ஆண்டுகளாக செயல்படாத தொழில் பூங்காவை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்

சிவகங்கை, மே 19:சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் மத்திய அரசு சார்பில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஸ்பைசஸ் பார்க்(தொழில் பூங்கா) கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் 40 பிளாட்கள் அமைக்கப்பட்டது. வாசனை பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி, பெருங்காயம் முதலியவற்றை மதிப்பு கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டது.இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் மத்திய அரசின் 33 சதவீத மானியம் கிடைக்கும். பூங்கா முழுமையாக செயல்படும் நிலையில் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1500 கோடி வருவாயும், சுமார் 2000ம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

 சில ஆண்டுகளுக்கு முன் மிளகாய் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் மிளகாய் உற்பத்தியை பெருக்கும் வகையில் இப்பூங்காவை அப்போதைய மத்திய அரசு அமைத்தது. சிவகங்கை, ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயிகள் வாசனை பொருட்களை இங்கு கொண்டுவந்து அரைத்து ஏற்றுமதி செய்யும் வகையில் திறக்கப்பட்ட இந்த ஸ்பைசஸ் பூங்கா கடந்த அதிமுக ஆட்சியில் கண்டு கொள்ளப்படாமல் முடக்கப்பட்டது. ஸ்பைசஸ் பார்க்கில் உள்ள அனைத்து கட்டிடங்களும் புதர் மண்டிக் கிடந்தது. மாநில அரசின் நகர் ஊரமைப்பு இயக்குநரகத்தின் சார்பிலான கட்டிட அனுமதி கூட வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.இந்நிலையில் திமுக அரசு வந்த பிறகு ஸ்பைசஸ் பார்க்கை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து முதன் முறையாக தனியார் நிறுவன உற்பத்தி இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

 இந்த பூங்காவை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை வர்த்தகர்கள் சிலர் கூறியதாவது,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டுதான் அன்றைய மத்திய அரசு இப்பூங்காவை அமைத்தது. ஆனால் பூங்கா செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. இதுபோல் அனைத்து பிளாட்டுகளையும் செயல்படுத்த முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...