×

மீன்பிடி தடைக்கால நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம், மே 19: சென்னை, கடலூர், தஞ்சை, நாகபட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட 13 தமிழக கடலோர மாவட்டங்களில் மீன் வளம் காக்க மீன்பிடி தடை காலம் ஏப்.15ல் தொடங்கி, ஜூன் 15 வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்களாக இருந்த ஒன்றிய அரசின் உத்தரவுப்படி கடந்த 2000ம் ஆண்டில் இருந்து 61 நாட்களாக உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளது.
இக்கால கட்டத்தில் விசைப்படகுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் உள்ளிட்ட பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006ல் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தடைக்கால நிவாரண தொகை கடந்தாண்டு வரை ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் இன்றைய விலை உயர்விற்கேற்ப நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில், 61 நாள் மீன்பிடி தடைக்காலத்தில் மீன் வளம் அதிகரிக்கும் என கடல் வள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தடைக்காலம் நீங்கியதும் தொழிலுக்கு செல்லும் ஒரு சில நாட்கள் மட்டும் அதிகளவில் மீன்கள் பிடிபடுகின்றன. அடுத்த சில நாட்களுக்கு பின் குறைவாகவே மீன்கள் சிக்குகின்றன. இது தொடர்பாக, அறிவியல் பூர்வ ஆய்வு செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடைக்காலத்தை நவ., டிச., மாதங்களில் அமல்படுத்தினால் மீனவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். நடப்பாண்டு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வழங்கும் தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க அரசு முன்வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...