தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கு 100 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு: இ.கருணாநிதி எம்எல்ஏ தகவல்

தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 1, 2, 3 ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஏற்கனவே சட்டமன்றத்தில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி மூலம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனால்,  வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் பகுதியிலிருந்து தாம்பரம் சானடோரியம் அருகே உள்ள கிருஷ்ணா நகர் வரை இருந்த ராட்சத சிமென்ட் பைப்புகள் அகற்றப்பட்டது.  அதற்கு பதிலாக, ராட்சத இரும்பு பைப்புகள் புதைக்கப்பட்டு சுத்தம் செய்து நீர்வரத்து சரி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  இந்த பணிகளை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், பல்லாவரம் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு நடத்தினர். அப்போது இன்னும் ஒரு மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இ.கருணாநிதி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், `பல்லாவரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகால கோரிக்கை இருந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  

சுமார் ரூ.43.10 கோடியில் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரிய பைப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று, குழாய்களை பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளுக்கு 100 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து சேரும். அவ்வாறு வரும் பட்சத்தில் நிச்சயமாக குடிநீர் தட்டுப்பாடு நீங்கும், பத்து நாளுக்கு ஒரு முறை வரும் குடிநீர், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும். இதில் குறிப்பாக பல்லாவரம், குரோம்பேட்டை, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மெப்ஸ், ஏர் போர்ஸ், கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் குடிநீருக்கு தீர்வு காணப்படும். இது கோடை வெயிலை பூர்த்திசெய்யும் வகையில் வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் பகுதியில் பம்பிங் செய்யுமிடத்தில் ஒரு தடுப்பணை போடப்பட்டு மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

Related Stories: