தமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 மணிநேரம் உழைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் உழைக்கிறார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 17ம் தேதி, மக்கள்  குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, 926 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களில் 760  மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இதையடுத்து, உத்திரமேரூர் ஒன்றிய அலுவலகத்தில், ரூ.10.51 கோடியில், 760 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி ஜி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, வருவாய்துறை சார்பில் 325 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 50 பேருக்கு முதியார் உதவித்தொகை, இருளர் சான்று 3 பேருக்கு, 60 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி, இஸ்திரி பெட்டி 10 பேருக்கு, மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் 10 பேருக்கு, இலவச வீடு  119 பேருக்கு என மொத்தம் 760  119 பேருக்கு ரூ.10.51 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் உழைக்கிறார். இதற்கு முன்பு இருந்த முதல்வர், ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டுமே கோட்டைக்கு வருவார். தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அதில், ஒரே ஆண்டில் 300க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைப் பெருந்தலைவர் வசந்திகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், வரதராஜன், வட்டாட்சியர் குணசேகரன், பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: