×

டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு டேங்கர் லாரியில் கடத்திய ரூ.60 லட்சம் எரி சாராயம் பறிமுதல்: மதுராந்தகம் அருகே பரபரப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு டேங்கர் லாரியில், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை டேங்கர் லாரியில் கடத்தியபோது, மத்திய புலயாய்வு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பறிமுதல் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் - மதுராந்தகம் சாலையில் உள்ள புதுப்பட்டு கிராமம் வழியாக டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு டேங்கர் லாரி மூலம் எரிசாராயம் கடத்தி செல்வதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், மத்திய புலனாய்வு போலீசார் புதுப்பட்டு கிராமத்தில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரியை மறித்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும், அதில் இருந்த டிரைவர், டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து போலீசார், லாரியை சோதனையிட்டனர். அதில், டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்ட எரிசாராயம் என  தெரிய வந்தது. டேங்கர் லாரியின் கொள்ளளவு 20 ஆயிரம் லிட்டர். அதில் இருந்த சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார், டேங்கர் லாரியுடன் எரி சாராயத்தை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். போலீசார் பறிமுதல் செய்த லாரி மற்றும் எரி சாராயத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து டெல்லியில் இருந்து யார் மூலம், புதுச்சேரிக்கு கடத்த இருந்தது. இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. தப்பியோடிய டிரைவர் யார், லாரியின் உரிமையாளர் யார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Delhi ,Pondicherry ,Madurantakam ,
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு