பிளஸ்-2 கணிதம் தேர்வு கடினம்

கோவை, மே 18:  கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 119 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வு கடந்த 5-ம் தேதி துவங்கியது. வரும் 28-ம் தேதியுடன் முடிகிறது. நேற்று கணிதம், விலங்கியல், மைக்ரோ பயோலஜி, வணிகவியல், நர்சிங், டெக்ஸ்டைல்ஸ், நியூட்ரிசன் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இத்தேர்வினை பள்ளியின் மூலமாக 33 ஆயிரத்து 115 மாணவர்கள் எழுத இருந்தனர். இந்நிலையில், தேர்வினை 31 ஆயிரத்து 921 பேர் எழுதினர். 1,194 பேர் தேர்வு எழுதவில்லை. தனித்தேர்வர்களாக 6 மையங்களில் 413 பேர் எழுதயிருந்தனர்.

இவர்களில், 352 பேர் தேர்வு எழுதினர். 61 பேர் தேர்வு எழுதவில்லை. மேலும், கணித தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கணித தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகையில், \”கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. பகுமுறை வடிவ கணிதம் பகுதியில் இருந்து எதிர்பார்த்த கணக்குகள் வரவில்லை. எதிர்பாராத வகையில் கேள்விகள் இருந்ததால் பதில் அளிக்க சிரமமாக இருந்தது” என்றனர். கணித ஆசிரியர் தமிழ்செல்வன் கூறுகையில், ”மாணவர்களுக்கு கேள்வியை எளிதாக கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் கேள்வி வடிவமைத்துள்ளனர். ஆனால், இது மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 மதிப்பெண் வினாக்களை 5 மதிப்பெண் வினாக்களில் கேட்டுள்ளனர். இதற்கு எப்படி பதில் அளிப்பது என்பதில் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால், கேள்விகள் எளிதாக இருந்தும் மாணவர்களுக்கு தேர்வு கடினமாக இருந்துள்ளது” என்றார்.

Related Stories: