கோடை தாக்கம் குறைந்ததால் எலுமிச்சை விலை திடீர் சரிவு

ஈரோடு, மே 18: மழை பெய்து கோடையின் தாக்கம் குறைந்ததால் கடந்த 10 நாட்களில் எலுமிச்சை விலை கிலோவுக்கு ரூ.150 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், திருச்சி, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் வரத்து இருந்து வருகின்றது. விளைச்சல் பாதிப்பு, கோடையின் தாக்கம் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மார்க்கெட்டில் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் கோடையின் தாக்கம் மெல்ல குறைந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவ தொடங்கி உள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்துவிட்டதால் மார்க்கெட்டில் எலுமிச்சை பழத்தின் விலையும் சரிந்துவிட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250க்கு விற்பனையான நிலையில் நேற்று கிலோ ரூ.100க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை வெப்பம் குறைந்துவிட்டதால் தேவையும் குறைந்துவிட்டதாகவும், ஆனால், வரத்து ஒரே சீராக உள்ளதால் விலை சரிந்து வருவதாகவும் வியாபாரிகள் கூறினர்.

Related Stories: