தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கணவனை கொன்று தற்கொலை நாடகமாடிய மனைவி கைது

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தற்கொலை நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மகள், மருமகனும் கைது செய்யப்பட்டனர். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (59). பெயின்டரான இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி வசந்தாவுடன் (50) தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில், மதுரவாயல் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட வசந்தா, ‘‘போதையில் தன்னுடன் தகராறில் ஈடுபட்ட கணவர் ராஜேந்திரன், கயிற்றால் தனக்கு தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்,’’ என தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, ராஜேந்திரனின் கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டும், தலையில் அடிபட்டும் இறந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், மதுரவாயல் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவானந்த், எஸ்ஐ சுதாகர் ஆகியோர் தலைமையில் போலீசார், ராஜேந்திரனின் மனைவி வசந்தாவை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், ராஜேந்திரன் குடிபோதையில் வந்து தகராறு செய்ததால் ஆத்திரமடைந்து அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: ராஜேந்திரன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று போதையில் வந்த ராஜேந்திரன், மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வசந்தா, ராஜேந்திரனை தாக்கி கீழே தள்ளி, வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கு, அவரது மகள் ராஜேஷ்வரி (27) மருமகன் பிரதாப் (29) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர், கொலையை மறைக்க, ராஜேந்திரன் போதையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீசார் விசாரணையில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து, தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி மனைவி வசந்தா, மகள் ராஜேஸ்வரி, மருமகன் பிரதாப் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: