குமரி கடலில் சூறைக்காற்று விசைப்படகுகள் கரை திரும்பின மீன்பிடி தொழில் பாதிப்பு

குளச்சல், மே 14: குளச்சலை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடித்து வருகின்றன. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான அசானி புயல் காரணமாக, குளச்சல் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. ேமலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் ஆழ்கடலுக்கு செல்லும்   பெரும்பாலான விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் ஏற்கனவே சென்றிருந்த விசைப்படகுகளும் அவசரமாக கரை திரும்பின. இதனால் குளச்சல் ஏலக்கூடத்துக்கு மீன் வரத்து மிகவும் குறைவாகவே காணப்பட்டது.  இருப்பினும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். சூறைக்காற்று காரணமாக கடலுக்கு செல்லாததால், குளச்சல் மீன்பிடி   துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதே போல் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூர், இனயம்  மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இனயம் மண்டலத்துக்குட்பட்ட இனயம், சின்னத்துறை,  இனயம் புத்தன்துறை, முள்ளூர்துறை, ராமன்துறை, மிடாலம் , ஹெலன்நகர் ஆகிய  கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்களும் தூத்தூர் மண்டலத்துக்குட்பட்ட  இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர் , வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை,  நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மீன்பிடித் தொழில்  செய்து வருகின்றனர் . இவர்கள் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் , 4000க்கு  மேற்பட்ட கட்டுமரங்கள் ,  பைபர் படகுகள் மூலமும்  மீன்பிடித்து வருகின்றனர்.வங்கக் கடலில்  புயல் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து அரசு கடலில் மீன்பிடிக்க செல்ல  கூடாது என மீனவர்களுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறையில் உள்ள 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 4000 மேற்பட்ட கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related Stories: