×

தீக்காயமடைந்த சிறுவனுக்கு திருமாவளவன் ஆறுதல்

திண்டிவனம், மே 14: திண்டிவனம் அருகே சாதி பெயரை சொல்லி சக மாணவர்கள் பழங்குடி இருளர் மாணவனை நெருப்பில் தள்ளியதால் தீக்காயமடைந்த சிறுவனிடம்விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி, அண்ணாநகர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன்(39). பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர். இவரது மகன் சுந்தர்ராஜ்(11), அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சவுந்தர்ராஜ் தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, சகமாணவர்கள் 3 பேர் சிறுவனை அழைத்து, சாதி பெயரையும் மற்றும் தகாத வார்த்தைகளால் பேசி அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தள்ளிவிட்டனர். படுகாயமடைந்த சிறுவன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் சகமாணவர்கள் 3 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுந்தர்ராஜை விசிக விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் திலீபன், திண்டிவனம் நகர மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி சிறுவனிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து, நடந்த பிரச்னை குறித்து கேட்டறிந்தார். திண்டிவனம் நகர மன்ற துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் சிறுவனுக்கு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு