திடீர் தீ விபத்தில் கார் எரிந்து சேதம்

தாம்பரம்: பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்  ரமணன். இவர் குடும்பத்துடன் செஞ்சியில் நடைபெறும் திருமணத்தில்  கலந்துகொள்வதற்காக நேற்று காரில் சென்றார். இவரது உறவினர் பூபதி காரை ஓட்டினார். இந்நிலையில், குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கார் வந்தபோது திடீரென காரின் முன் பகுதியிலிருந்து கரும்புகை வௌியேறியது. இதையடுத்து, பூபதி காரை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், காரில் இருந்த 5 பேரும் கீழே இறங்கினர். தொடர்ந்து கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், கார் முழுவதும் எரிந்து சேதமானது. புகாரின்பேரில், குரோம்பேட்டை  போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மற்றொரு சம்பவம்: தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் பிரபல தனியார் கைத்தறி துணி விற்பனையகம் 2 தளங்களில் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், தீ வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்த தாம்பரம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Related Stories: