திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி, மே 13:  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடந்த திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசியதாவது: தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வீடு வழங்கும் பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கோடை காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க, அலுவலர்கள் மேற்பார்வையிட வேண்டும். அதேபோல் வீடுகள் கட்டுமான பணிகள், சாலை பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்சித்துறை பொறியாளர்கள் ஒருங்கிணைந்து, திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, செயற்பொறியாளர் மலர்விழி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: