மருத்துவமனைகளில் சட்ட விரோதமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை

விருத்தாசலம், மே 13: விருத்தாசலம், காந்திநகர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய இடங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். பின்னர் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராமநத்தம் மெடிக்கலில் கருகலைப்பு செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  வேப்பூரில் சிகிச்சை அளித்து குழந்தை இறந்த சம்பவம் காரணமாக விசாரணை செய்தபோது அவர் மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றதற்கான சான்றிதழை காண்பிக்காமல் சென்றுவிட்டார். கண்டிப்பாக யாராக இருந்தாலும் இதுபோன்ற தவறான சிகிச்சை அளித்தால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் ஸ்கேன் சென்டர் நடத்தக்கூடிய அத்தனை தனியார் அமைப்புகளையும் வரவழைத்து சட்ட விரோதமான எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தி சொல்லி இருக்கிறோம், என்றார். கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா, விருத்தாசலம் தாசில்தார் தனபதி, விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஆணையர் சசிகலா, ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை, மருத்துவர்கள் எழில், பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: