×

குடியேறும் போராட்டம் போலீசாருடன் மக்கள் வாக்குவாதம் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கடலூர், மே 13: கடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பனங்காட்டு காலனி. நத்தப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட இப்பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், போதிய இடவசதி இல்லாததால் இலவச மனைப்பட்டா வழங்கி தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை பனங்காட்டு காலனி பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நத்தப்பட்டு பகுதியில் உள்ள காலிமனை பகுதியில் திடீரென கொட்டகை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட பகுதி தனி நபருக்கு சொந்தமானது என கூறப்படும் நிலையில் தகவலறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் குடியேறும் போராட்டத்தை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். மனைப்பட்டா கேட்டும், பல ஆண்டுகாலமாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறாமல் காத்திருந்தனர். இதை தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்