பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் 4 பேர் அதிரடி கைது

புவனகிரி, மே 13: புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இயங்காமல் மூடப்பட்ட இந்த ஆலையில் உள்ள இரும்பு பொருட்கள் அவ்வப்போது திருடு போனது. நேற்று முன்தினம் அதிகாலை கம்பெனிக்குள் நுழைந்த 20 பேர் கொண்ட ஒரு கும்பல் இரும்பை திருடி உள்ளனர். அப்போது தகவலறிந்து திருட்டு சம்பவத்தை தடுக்க வந்த காவலாளிகள் மற்றும் போலீசார் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தது. இதில் 4 குண்டுகள் வெடித்து சிதறியது. 2 குண்டுகள் வெடிக்கவில்லை. இதுசம்பந்தமாக தனியார் ஆலை பாதுகாப்பு அதிகாரி கண்ணன் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சித்திரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(47), நற்குணன் (50), புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜய்(25), குள்ளஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (22) ஆகிய 4 பேரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார், யார், மொத்தம் எத்தனை பேர் வந்தனர், என்ன நடந்தது என்பது போன்ற பல்வேறு கேள்விகளை 4 பேரிடமும் கேட்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: