கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கடலூர், மே 12:  வங்கக்கடலில் தீவிர புயலாக நிலைக்கொண்டிருந்த ‘அசானி’ புயலாக வலுவிழந்தது. இதையடுத்து ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே அசானி புயல் நிலைக்கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்கும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அசானி புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் கடலூரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நாள் முழுவதும் வெயிலை காண முடியவில்லை. மேலும் கடலூர் தேவனாம்பட்டினம், துறைமுகம், தாழங்குடா, உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதன் காரணமாக கடலூரில், மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.

 தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், பெரிய வகை விசைப்படகுகள் ஏற்கனவே மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. சிறிய வகை பைபர் படகுகள் மற்றும் கட்டு மரங்களில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில் இந்த கடல் சீற்றம் காரணமாக, சிறிய வகை படகுகளை பயன்படுத்தும் மீனவர்கள், தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையோர பகுதிகளில் நிறுத்தியிருந்தனர். இதனால் கடலூர் துறைமுகம் மீன்பிடித்தளம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக, கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் செல்லாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: