மக்களின் வங்கி கணக்கில் விழுந்த பணம் புதிய சாலை போட்டதாக பல லட்சம் முறைகேடு பெண்அதிகாரி சஸ்பெண்ட், பிடிஓ விடுவிப்பு

விழுப்புரம், மே 12: தார்சாலை அமைக்காமல் பலலட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக மயிலம் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் வீரம்மாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனை பணியிலிருந்து விடுவித்து ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உட்பட்ட கண்ணியம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் தேசிய ஊரக வேலைதிட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் இவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம், 3 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இதுவரை இவ்வளவு தொகை செலுத்தியதில்லையே என்று யோசித்து வந்த நிலையில், பின்னர், அந்த பணத்தை சில நாட்களில் ஊழியர்கள் மூலம் வசூலிக்கப்பட்டதாம். பின்னர்தான் தெரியவந்தது, அந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் தார்சாலை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளது.

தார்சாலை அமைக்க பயனாளிகள் வேலை செய்ததுபோல் கணக்கு காண்பிக்கப்பட்டு அதற்கான கூலியை பொதுமக்களின் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளனர். இதனை அறிந்த மக்கள் தார்சாலை அமைக்காமலேயே பணத்தை முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக பிடிஓ அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பிடிஓவையும் முற்றுகையிட்டனர். இதுகுறித்து, ஆய்வு செய்திட ஆட்சியர் மோகன் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதில், 640 மீட்டர் தூரம் தார் சாலை அமைக்க ரூ.14,17,000 நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் தார்சாலை அமைக்காமலேயே, சாலை போட்டதாக பல லட்சம் பணத்தை கையாடல் செய்தது கண்டறியப்பட்டது. தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.2.20 லட்சம் செலுத்தி மோசடி செய்துள்ளனர்.

மீதமுள்ள ரூ.12 லட்சத்தையும் மொத்தமாக மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சினிமாவை மிஞ்சும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட மயிலம் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்(NRGA) வீரம்மாளை சஸ்பெண்ட் செய்தும், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) புருஷோத்தமனை பணியிலிருந்து விடுவிப்பு செய்து ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டது யார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறதாம். அதில், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்காலிக ஊழியர் டிஸ்மிஸ்: மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் தார் சாலை அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரம்மாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை கண்காணிக்க தவறியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனிடையே இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியரான கணினி ஆபரேட்டர் பாலு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: