×

விழுப்புரம் அருகே முட்டத்தூர் மலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

விழுப்புரம், மே 12: விழுப்புரம் அருகே முட்டத்தூர் மலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம்  -செஞ்சி சாலையில் அமைந்துள்ளது முட்டத்தூர் கிராமம். இங்குள்ள மலையில்  விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்  செங்குட்டுவன் தலைமையில் அக்கிராம இளைஞர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பாதை வசதி  இல்லாத கரடு முரடான பாறைகளின் மீது இவர்கள் 2 மணி நேரம் பயணம்  மேற்கொண்டனர். சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் வழுவழுப்பான சமதளப் பாறை  இருந்தது. அதற்கு அருகில் இருக்கும் பாறையில் சிகப்பு வண்ண ஓவியங்கள்  இருப்பது கண்டறியப்பட்டன. இதுகுறித்து, செங்குட்டுவன் கூறுகையில், பாறைக்கு  உட்புறத்தில் அடர் சிவப்பு நிறத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன.  மனித உருவம் மற்றும் விலங்கு போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன. கால  மாற்றத்தால் பல இடங்களில் ஓவியங்கள் தெளிவில்லாமலும் சிதைந்தும் உள்ளன.

இந்த  ஓவியங்கள் குறித்து மூத்த கல்வெட்டு ஆய்வாளரும் கீழ்வாலை பாறை ஓவியங்களைக்  கண்டறிந்தவருமான அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது,  “இந்த  ஓவியத் தொகுப்பில் மனிதர்கள் குழுவாக இருக்கின்றனர். வேட்டைச் சமூகமாக  இருந்தபோது விலங்குகளை எதிர்த்துப் போரிடுவதற்கானப் பயிற்சியை இவர்கள்  மேற்கொள்கின்றனர். இதில் விலங்கின் உருவமும் இடம்பெற்றுள்ளது.  இந்த ஓவியங்கள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்” எனத்  தெரிவித்திருப்பதாக கூறினார்.

Tags : Muttathur Hill ,Villupuram ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...