மழையால் கத்திரி வெயில் தாக்கம் தணிந்தது

போச்சம்பள்ளி, மே 12: மழையால் போச்சம்பள்ளி பகுதியில் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது. போச்சம்பள்ளி பகுதியில் கடந்த வாரம் முதல் கடும் வெயில் கொளுத்தி வந்தது. காலை 9 மணிக்கே, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதை குறைத்துக்கொண்டனர். வெயிலுக்கு கம்மங்கூழ், நுங்கு, இளநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக அசானி புயல் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, ஓசூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழையுடன் சூறைக்காற்று வெளுத்து வாங்குகிறது. மழையால் ஓரிரு இடங்களில் மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. மேலும் ஊத்தங்கரை பகுதியில் அறுவடைக்கு தயராக இருந்த லட்சக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன, தேசிய சாலையோரத்தில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன.

பல டன் மாங்காய் அறுவடை நேரத்தில் அனைத்தும் உதிர்ந்து விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மழையால் பல மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை லேசான மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக போச்சம்பள்ளி பகுதியில், மழை விட்டு விட்டு பெய்வதால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. வழக்கமாக மே மாதம் 4ம் தேதியில் இருந்து கத்திரி வெயில் வாட்டி எடுப்பது வழக்கம். இதன்படி கத்திரி வெயில் வாட்டி எடுக்கும் நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.கத்திரி வெயில் கொளுத்தும் நேரத்தில் மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: