மாஞ்சா நூல் தயாரித்து விற்றால் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடைகாலம் தொடங்கியதால் சென்னை மாநகரில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தொடர் புகார்கள் வந்தன. தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்க ஒவ்வொரு காவல் மாவட்டங்கள் வாரியாக ஏற்கனவே அமைக்கப்பட்ட தனிப்படையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதையும் மீறி சில இடங்களில் மாஞ்சா நூல்கள் மூலம் அபாயகரமான வகையில் பட்டம் விடப்படுகிறது. இதையடுத்து சென்னை மாநகர காவல் எல்லையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்ய வரும் ஜூலை 8ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மீறி யாரேனும் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: