திராவிட மாடல் வளர்ச்சி - திசையெட்டும் மகிழ்ச்சி திமுக அரசின் ஓராண்டு சாதனை மலர்: கலெக்டர் வெளியிட்டார்

திருவள்ளுர்:  பூண்டி ஊராட்சி ஒன்றியம், கொழுந்தலூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அனைத்து துறைகள் சார்பில், திமுக அரசில் ஒரு வருட சாதனை குறித்து மக்கள் தொடர்புத்துறை சார்பில், தயாரிக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி “நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்”, “திராவிட மாடல் வளர்ச்சி - திசையெட்டும் மகிழ்ச்சி” ஆகிய மலரை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.

இதன்பின்னர் கலெக்டர் கூறியதாவது; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகும் நிலையில், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பல்வேறு துறைகள் சார்பாக செய்தியாளர் பயணங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக வேளாண்மை  உழவர் நலத்துறைக்கு மட்டும் தனியாக ஒரு பட்ஜெட் அறிவிக்கப்பட்டு, வேளாண்மை துறைக்காக பல்வேறு புதிய திட்டங்கள் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளுர் மாவட்டத்தில் 2021-2022 ஆண்டில் வேளாண் பயிர்கள் சுமார் 1,29,025 ஹெக்டர் பரப்பளவிலும், தோட்டக்கலை பயிர்கள் சுமார் 20,687 ஹெக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியை பொறுத்தவரை 4.41 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து சாதனை அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தை விட 6000 மெட்ரிக் டன் உற்பத்தி அதிகமாக செய்திருப்பது ஒரு சாதனையாகும். பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் 2021-2022 மட்டும் ₹ 81 கோடி இழப்பீட்டு தொகையாக 34,000 விவசாயிகளுக்கு நம் திருவள்ளுர் மாவட்டத்தில் கொடுத்துள்ளோம்.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை பொறுத்தவரை 2020-2021-ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசின் துரித நடவடிக்கையின் மூலமாக கரும்பு விவசாயிகளிடமிருந்து நடப்பு அரவை பருவத்தில் 1,87,298 மெட்ரிக் டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, அரவை முடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்டம், குருபுரம் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் நிலம் கண்டறியப்பட்டு, முதல் முறையாக திறந்தவெளி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

இதையடுத்து, பூண்டி ஊராட்சி ஒன்றியம், வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கொழுந்தலூர் அரசு விதைப்பண்ணையில் பத்தி முறையில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள நெல் வயல் பரப்பினையும், அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை சுத்திகரிப்பு செய்யும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். கொழுந்தலூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், திருவள்ளுர் மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பாக கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்களை தெரிவித்தார். திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மாமண்டூர் பகுதியில் தோட்டக்கலை  மலைப்பயிர்கள் துறையின் சார்பில் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் மா  செடிகளை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார். திருத்தணி ஊராட்சி ஒன்றியம், தாடூர் பகுதியில் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு - குறு விவசாயிகளுக்கான 100 சதவிகித மானியத்தின் மூலம் வழங்கப்பட்ட சொட்டு நீர் பாசனத்தினை பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டார்.

Related Stories: