மாமல்லபுரம் அருகே ரூ.10 லட்சத்தில் கட்டி முடித்து 4 ஆண்டுகளாக மூடி கிடக்கும் உடற்பயிற்சி கூடம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே எச்சூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள உடற்பயிற்சி கூடத்தை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஊராட்சி ஏரிக்கரை தெருவில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக கடந்த 2019ம் ஆண்டு ₹10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டி முடித்து 4 ஆண்டுகளாக, அந்த உடற்பயிற்சி கூடம் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாக உள்ளது. மேலும், அருகில் உள்ள முட்புதர்களில் இருந்து பாம்பு, தேள், பூரான் உள்பட விஷ பூச்சிகள் அங்கு நுழைவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பல லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பூட்டியே இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில், ஏராளமான உபகணரங்களும், வீணாகி கிடக்கின்றன. அதனை பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்தால், அதனை காயலான் கடையில் எடைக்கு போடும் நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம், இதில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக திறக்காமல் மூடியே உள்ள உடற்பயிற்சி கூடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஊராட்சியில், கடந்த 2019ம் ஆண்டு ₹10 லட்சத்தில், இப்பகுதி இளைஞர்களுக்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. தேவையான, அனைத்து உபகரணங்கள் இருந்தும், 4 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பூட்டியே கிடப்பதால், உபகரணங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடற்பயிற்சி கூடத்தை திறந்தால், எச்சூர் ஊராட்சியில் உள்ள இளைஞர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Related Stories: