நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி, நிலத்தடி நீர் உயர்ந்து, விவசாயிகள் நவரை பருவத்தில் மொத்தம் 68,250 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்தனர். தற்போது நெல் அறுவடை பணிகள் நடக்கின்றன. இதில் மொத்தம் 184.55 லட்சம் மெட்ரிக்டன் நெல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடியாக அவர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டி மாவட்டம் முழுவதும் மொத்தம் 79 இடங்களில் தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் தற்போது, 66  தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அரசு விதிமுறைபடி பணிகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேளாண், தோட்டக்கலை, வருவாய், ஊரக வளர்ச்சி ஆகிய துறை அலுவலர்கள் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த அலுவலர்கள் தினமும் நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு இணையவழி பதிவு முறை டோக்கன் வரிசைபடி பணி நடக்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். விவசாயிகள் அளிக்கும் சிட்டா, அடங்கல், விஏஓ வழங்கும் குத்தகை சான்று ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். இடைத்தரகர்கள், வியாபாரிகள், விவசாயிகள் அல்லாதோர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் பணிகளில் தலையீடு செய்வதை கண்காணித்து, உரிய அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

நெல் கொள்முதல் நிலையங்களில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதனை தடுக்கவும், அதுபற்றிய புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 044-27237107, 044-27237207 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: