சிகிச்சை பெற்ற குழந்தை இறந்த விவகாரம் போலி மருத்துவர் தப்பியோடியதால் பரபரப்பு போலீசில் பரபரப்பு புகார்

வேப்பூர், மே 11: சிகிச்சை பெற்ற குழந்தை இறந்த விவகாரத்தில் போலி மருத்துவர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல் மகன் கார்த்திக் (28). இவரது 5 வயது பெண் குழந்தை லட்சிதாவுக்கு கடந்த 7ம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது பெற்றோர் காலை 11 மணியளவில் வேப்பூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் சத்தியசீலன் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார். குழந்தையை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அந்த குழந்தை லட்சிதா உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வேப்பூர் தனியார் மருந்தகத்தில் குழந்தை லட்சிதாவுக்கு சிகிச்சை அளித்த சத்தியசீலன், முறையாக படித்து தேர்ச்சி பெற்று மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவரா எனவும், குழந்தைக்கு தவறான சிகிச்சை ஏதேனும் அளித்துள்ளாரா என்பது குறித்து விசாரிக்க சென்றுள்ளனர்.அப்போது சத்தியசீலனின் பதிவெண் சான்றிதழ்களை அரசு மருத்துவர் தமிழரசன் கேட்டுள்ளார். அப்போது சத்தியசீலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் மருந்தகத்தின் பின்பக்க வழியே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன், வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வேப்பூரில் அமைந்துள்ள மருந்தகத்தில் போலி மருத்துவர் சத்தியசீலன் என்பவர் லட்சிதா என்கிற குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்து குழந்தை இறந்தது குறித்து விசாரிக்க சென்றதில் போலி மருத்துவர் சத்தியசீலன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அங்கிருந்து பின்புறமாக ஓடிவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்தார்.

இதுகுறித்து சத்தியசீலன் மீது வேப்பூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலி மருத்துவர் சத்தியசீலன் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ இணை இயக்குநருக்கு புகார் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Stories: