திண்டிவனம் அருகே 11 வயது சிறுவனை நெருப்பில் தள்ளி கொல்ல முயற்சி 3 மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு

திண்டிவனம், மே 11: திண்டிவனம் அருகே 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவனை நெருப்பில் தள்ளி கொல்ல முயன்றதாக மாணவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.  திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி பகுதியை சேர்ந்த கன்னியப்பன்(39). பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர். இவரது மகன் அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.  பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் ஒரு மாதத்துக்கு முன்பு கன்னியப்பணின் மகன் பள்ளிக்கு போகும்போது சாதி பெயரை சொல்லி அழைத்து, அவமானம் செய்ததாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக சிறுவன் அவரது தந்தையிடம் தெரிவித்ததன் பேரில், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சம்மந்தப்பட்ட சிறுவன் தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, கருமகாரிய கொட்டகை அருகே நின்றிருந்த 3 பேர் சிறுவனை அழைத்து, சாதி பெயரையும் மற்றும் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. மேலும் அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் சிறுவனை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நெருப்பில் விழுந்து படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்த மூன்று பேரில் இரண்டு பேர் அழைத்து சென்று வீட்டில் விட்டுள்ளனர். பின்னர் சிறுவனின் தாய் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சிறுவனின் தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுவனின் உடலில் அதிக அளவில் தீக்காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மணம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கன்னியப்பன் தனது மகனை நெருப்பில் தள்ளி கொல்ல முயன்றதாக கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை விசிக மாவட்ட செயலாளர் சேரன், திண்டிவனம் தொகுதி செயலாளர் பூபால், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க தலைவர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணி மற்றும் விசிக நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனர். சிறுவனை நெருப்பில் தள்ளிவிட்ட  சக மாணவர்கள்   3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சார் ஆட்சியர் அமித் மற்றும் வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். திண்டிவனம் அருகே ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருளர் வகுப்பை சேர்ந்த மாணவனை சாதி பெயரை சொல்லி திட்டி நெருப்பில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: