திருவள்ளூர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும்: பேரவையில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: திருவள்ளூர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார். தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவள்ளூர் தொகுதி வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது: திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மணவாளநகர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் மற்றும் சின்னம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் மற்றும் பூண்டி ஊராட்சியில் புறக்காவல் நிலையம் அமைத்திட வேண்டும். திருவள்ளூர் தொகுதி, திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமிவிலாசபுரம் ஊராட்சியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து பாலம் அமைத்திட வேண்டும். பூண்டி ஒன்றியம், ராமஞ்சேரி - ஈன்றபேட்டை இடையே நகரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திட வேண்டும். விடையூர் கலியனூர் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்திட வேண்டும்.

திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து பூங்காக்களையும் அரசு சிறப்பு திட்டம் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் நகரில் காய்கறி, மீன் மற்றும் இறைச்சி விற்பனை அங்காடிகள் நகராட்சி சார்பில் அமைத்திட வேண்டும். திருவள்ளூர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திடும் வகையில் நகரத்தின் அருகில் உள்ள வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ஏகாட்டூர், திருப்பாச்சூர், புல்லரம்பாக்கம், தலக்காஞ்சேரி, காக்களூர், சேலை ஆகிய ஊராட்சி பகுதிகளை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைத்திட வேண்டும்.

திருவள்ளூர் நகராட்சி, வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளை நிறைவேறிறயதால் சாலைகள் சேதமடைந்துள்ளது. அங்கு புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நிறைவேற்றிட வேண்டும். திருவள்ளூர் தொகுதியில், திருவள்ளூர் நகரில் உள்ள உழவர் சந்தையை மேம்படுத்தி மாதிரி சிறப்பங்காடியாக அமைத்திட வேண்டும். கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம், கடம்பத்தூா், கனகம்மாசத்திரம், திருவாலங்காட்டில்  உழவர் சந்தை அமைத்து தர வேண்டும். திருவள்ளூர் நகரில் பெரும்பாக்கம், புங்கத்தூர், வள்ளுவர்புரம், எம்ஜிஆர் நகர், வரதராஜநகர் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* எம்ஜிஆர் பாடலை பாடினார்

தனது பேச்சின் இடையே எம்ஜிஆர் பாடலான, `அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா..’ என்பதை ராகத்துடன் பாடினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் சிலர், அது தங்களது கட்சி தலைவர் எம்ஜிஆர் பாடியது என்பதை நினைவுபடுத்தினர். அதற்கு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், `பாடலை பாடியது வேண்டுமானால் உங்கள் தலைவராக இருக்கலாம். அதன்படி ஆட்சியை செய்பவர் எங்கள் முதல்வர்’ என்று பதிலளித்தார். இறுதியாக தனது பேச்சை அவர் முடிக்கும்போதும், `ஒரு தவறு செய்தால்.. அதை தெரிந்து செய்தால்.. அது தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்று மீண்டும் எம்ஜிஆர் பாடலை பாடி நிறைவு செய்தார்.

Related Stories: