விருத்தாசலத்தில் பரபரப்பு கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

விருத்தாசலம், மே 10:  விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலை கல்லூரி நகரில் ஜெக முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தற்போது இந்த சாலை நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக ஜெக முத்துமாரியம்மன் கோயில் அகற்றப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் அப்பகுதியில் உள்ள கல்லூரி நகரில் கோயிலை நிறுவுவதற்கான பணியை மேற்கொள்வதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கோயில் அமைந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும், இதனால் அப்பகுதியில் பல்வேறு அசம்பாவித சூழ்நிலைகள் உருவாகும் எனக்கருதி பொதுமக்கள் குடியிருக்கும் அப்பகுதியில் கோயிலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை கல்லூரி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், செயலாளர் கவுன்சிலர் அருண், பொருளாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் ராஜீ, நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட அப்பகுதியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் குடியிருக்கும் தெருவில் வேறு ஒரு இடத்தில் இருந்த கோயிலைக் கொண்டுவந்து அமைப்பதை நிறுத்த வேண்டும். என வலியுறுத்தினர். பின்னர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: