வரும் 12ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் தேர் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர், போலீஸ் எஸ்பி ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த தேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் திருவிழா வரும் 12ம் தேதி வியாழக்கிழமை  நடைபெற உள்ளது. திருத்தேர் விழா நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து நேற்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் எஸ்பி வருண்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திருத்தேர் பவனி வர உள்ள பனகல் தெரு, குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு ஆகிய பகுதிகளை கலெக்டர், போலீஸ் எஸ்பி ஆகியோர் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் நடந்து சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது ஆர்டிஓ ரமேஷ், டிஎஸ்பி சந்திரதாசன், கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், தாசில்தார் ஏ.செந்தில்குமார், கோவில் மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.சம்பத், இன்ஸ்பெக்டர் பத்ம பபி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜ், சக்திவேல், சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தயாராகும் பிரமாண்ட தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 48 அடி உயரம், 21 அடி அகலம் மற்றும் 75 டன் எடை கொண்ட பிரமாண்ட திருத்தேர் அலங்கரித்து தயார்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Stories: