வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவர் திருவிழா, கண்காட்சி

நாமக்கல், ஏப்.28:நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உழவர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, விவசாயிகளின் பங்களிப்பே நமது முன்னுரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் தொழில்நுட்பம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண்மை அறிவியல் நிலையத்தின் புதிய தொழில் நுட்பங்கள், முக்கிய இடுப்பொருட்கள், வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், பட்டுவளர்ச்சி மற்றும் கால்நடை பராமரிப்புதுறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த முக்கிய தொழில்நுட்பங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி துவக்கி வைத்து பார்வையிட்டார். பயிர் விளைச்சல் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சிறந்த விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலைகளை வழங்கி, ராஜேஸ்குமார் எம்பி பேசுகையில், ‘விவசாயிகளுக்கு தாங்கள் விளைவித்த பொருட்களில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விவசாயிகள் வேளாண்மையோடு தற்போது ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், மாடு வளர்த்தல், மீன் வளர்த்தல் உள்பட பல்வேறு துணை நடவடிக்கைகளயும் மேற்கொண்டு, கலப்பு பண்ணையம் உருவாக்கி லாபம் ஈட்டி வருகிறார்கள். இதன் காரணமாக பொறியியல் துறையில் மேம்பட்ட படிப்பு படித்தவர்கள் கூட, கலப்பு பண்ணைய முறைகளை பின்பற்றி, குறைந்த இடத்தில் அதிக லாபம் ஈட்டி வருகிறார்கள். விவசாயிகள் புதிய உத்திகளை கற்று, அதை வேளாண்மையில் பயன்படுத்த வேண்டும்,’ என்றார். கருத்தரங்கத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவியல் பேராசிரியர் சோமசுந்தரம், இயற்கை விவசாயம் என்ற தலைப்பிலும், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கோழியின அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜேந்திரன் லாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பிலும், சம்பத்குமார் ஒட்டுண்ணி மூலம் மரவள்ளியில் மாவுப்பூச்சி மேலாண்மை தொழில் நுட்பம் ஆகிய தலைப்புகளில் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ, வேளாண்மை அறிவியல் நிலையத்தலைவர் அழகுதுரை, வேளாண்மைதுறை இணை இயக்குனர் அசோகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: