கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஏப்.28: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுப்ரமணி வரவேற்று பேசினார். ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான மாத ஊதியத்தை நிர்ணயித்து இயக்குநரகத்தில் இருந்து தனி சுற்றறிக்கை அனுப்பவேண்டும்.  பணியாளர்களின் 30 ஆண்டுகால பணிக்காலத்தை கருத்தில் கொண்டு, சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிமுடிந்த ஊராட்சி செயலர்களுக்கு வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநில இணைச்செயலாளர் பச்சமுத்து, மாநில பொதுச்செயலாளர் முருகன், சங்கீதா, சிவக்குமார், சரவணன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சக்திவேல், சாமிதுரை, அசோகன், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: