குருபரப்பள்ளி அருகே வெவ்வேறு விபத்துகளில் முதியவர், தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஏப்.28: குருபரப்பள்ளி அடுத்த எட்ரப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடப்பன்(80). கடந்த 26ம் தேதி, குருபரப்பள்ளியில் இருந்து கொத்தகிருஷ்ணப்பள்ளி செல்லும் சாலையில், எட்ரப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அதே போல், சேலம் மாவட்டம், வடசென்னிமலையை சேர்ந்தவர் செல்வராஜ்(57), கூலி தொழிலாளி. இவர் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு டூவீலரில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். குருபரப்பள்ளி மேம்பாலம் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்பு சுவரில் டூவீலர் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்துகள் குறித்து குருபரப்பள்ளி விசாரிக்கின்றனர்.

Related Stories: