சொத்து தகராறில் இரட்டை கொலை தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை கடலூர் கோர்ட்டில் தீர்ப்பு

கடலூர், ஏப். 28: சொத்து தகராறில் உறவினர்கள் 2 பேரை கொலை செய்த வழக்கில் தந்தை மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன்கள் கணேசன்(62), ராஜா என்ற விஜயன் (58). இவர்களுடைய, பூர்வீக சொத்து பாகம் பிரிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. மேலும் இந்த சொத்து விஜயன் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இந்நிலையில், மலேசியாவில் வேலைப்பார்த்து வந்த கணேசனின் மகன் குருசேவ்(30) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதனால் அவர் மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இதையடுத்து அவர் பூர்வீக இடத்தில் வீடு கட்டுவதற்கு, விஜயனிடம் சென்று இடம் கேட்டுள்ளார். அதற்கு, விஜயன் இடம் தர மறுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக  பேசகடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி கணேசன், குருசேவ் மற்றும் உறவினரான சீர்காழியை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் அபினாஷ்(24) ஆகியோர் விஜயன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில், விஜயன், அவரது மகன் கோபிநாத் (24) ஆகியோர் சேர்ந்து மூன்று பேரையும் தாக்கியதோடு, கத்தியால் வெட்டியுள்ளனர். இதில், குருசேவ், அபினாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயன், கோபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது, கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், விஜயன் மற்றும் கோபிநாத் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர்கள் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார்.

Related Stories: