ரங்கத்தில் சித்திரை திருவிழா 7ம் நாள் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

திருச்சி, ஏப். 28:சித்திரை திருவிழா 7ம் நாள் விழான நேற்று நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்புமிக்க சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு வரும் நம்பெருமாள் மாலையில் பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.நேற்று 7ம் நாள் சித்திரை விழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளிய பின், சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சிசுற்று வழியே இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சேர்ந்தார்.

தொடர்ந்து திருமஞ்சனம் கண்டருளிய பெருமாள் நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். தொடர்ந்து 8ம் நாள் திருவிழாவான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபம் சேர்கிறார். மாலை 6.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறை செல்கிறார். இரவு 9.30மணிக்கு சின்னப்பெருமாள் சயனம் நடக்கிறது. இதில் சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நாளை (29ம் தேதி) காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் சேவை நேரம்: காலை 7.15 மணி முதல் பகல் 1.30 மணி, பகல் 1.30 மணிமுதல் மாலை 5 மணிவரை, மாலை 6.45 மணிமுதல் இரவு 8.30 மணிவரை ஆகும். இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி கிடையாது.

Related Stories: