×

சகதி வழியாக செல்வதால் சிரமம் தரைப் பாலத்துடன் புதிய சாலை கிராம மக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, ஏப்.28: முதுகுளத்தூர் ஒன்றியம், நல்லுக்குறிச்சி பஞ்சாயத்து ஆம்பல் கூட்டம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நூறு நாள் வேலை உள்ளிட்ட அன்றாட கூலி வேலை செய்து வருகின்றனர். சுமார் 70 ஆண்டுகளை கடந்தும் இந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதி மற்றும் சாலை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஆம்பல் கூட்டம் கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் இந்த கிராமத்திலிருந்து நல்லுக்குறிச்சி கிராமத்திற்கு 3 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆம்பல் கூட்டம் கிராமத்தின் கண்மாய் கலுங்கு (கல்வாய்) அருகே கிராமத்திற்கு செல்லும் 100 மீட்டர் சாலை சேரும், சகதியுமாக மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பெய்த சிறுமழைக்கு பொது மக்கள் செல்லும் பாதையில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளதால் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண்கள் கர்ப்பிணி பெண்கள் அந்த சாலையை சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ் கூட வந்து,செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள், சாலை இல்லாததால் மயான சாலையில் சென்று மயானம் வழியாக சென்றுவர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் எடுக்க செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே ஆம்பல் கூட்டம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிறு தரைப் பாலத்துடன் கூடிய புதிய சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு