101 விலங்குகளின் பெயரை கூறிய 6 வயது சிறுமி 1.13 நிமிடத்தில் இடுப்பில் வளையத்தை 137 முறை சுற்றியபடியே ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை

திருப்பூர், ஏப்.28: திருப்பூரை அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம் கிருபாகர் (32). எல்.ஐ.சி. முகவர். இவரது மனைவி காயத்ரி (31). இவர்களுக்கு நேஹா (6), விசாகன் (2) என ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், நேஹா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கற்றல் மற்றும் நினைவுத்திறன் அதிகம் உள்ள நேஹா கடந்த மாதம் ஒரு சாதனை முயற்சியை மேற்கொண்டார்.அதன்படி, ஒரு நிமிடம் மற்றும் 13 வினாடிகளில் 137 முறை இடுப்பில் வளையத்தில் சுற்றியுள்ளார். மேலும், அவ்வாறு சுற்றியபடியே 101 விலங்குகளின் பெயரையும் தெரிவித்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த அவரது பெற்றோர் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு (கிராண்ட் மாஸ்டர்) அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இந்த வீடியோ மற்றும் மாணவியின் திறமையை பார்த்த ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அதனை அங்கீகரித்து அதற்கான சான்றையும் மாணவிக்கு அனுப்பியுள்ளது. வருகிற ஆண்டில் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்சில் மாணவியின் இந்த செயல்பாடும் அச்சிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 6 வயதில் இந்த சாதனையை செய்து இடம் பிடித்த மாணவி நேஹாவை பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

Related Stories: