கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு இயற்கை பேரிடர் ஏற்படாத பகுதிகளை கண்டறித்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்

ஊட்டி, ஏப்.28:ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.  

கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் இயக்குநர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது:நீலகிரி மாவட்டத்தில் நிலசரிவு தொடர்பாக நீண்ட கால தடுப்பு பணிகள் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள புவியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் டாக்டர் ஜெயபாலன், ஜீவானந்தம், மற்றும் ஆண்டிரிவ் வின்னர் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில், நிலச்சரிவுகள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது அப்பகுதியில் இயற்கை பேரிடர் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதனையும் ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் நிலசரிவு ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ரானா, குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஷ்வேஷ்வரி, இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் மணிவண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: