ஈரோடு, ஏப்.28: தமிழகத்தில் தசைசிதைவு நோய்க்கான ஆராய்ச்சி நிலையம் துவங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாதிக்கப்பட்டவர் மனு அளித்துள்ளார். ஈரோடு ஜவுளி நகரை சேர்ந்த தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சமூக ஆர்வளர் ராஜா என்பவர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பிசியோதெரபி சிகிச்சையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார வசதி இல்லாததால் பிசியோதெரபி சிகிச்சையினை அவர்களது வீட்டிலேயே பெற்றிட வசதிகள் செய்திட வேண்டும். தமிழகத்தில் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகளுக்குண்டான ஆய்வகம் அமைக்க வேண்டும். தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வேண்டும். ஆதரவற்ற தசைச் சிதைவு நோயிகளுக்கு காப்பகங்களை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசு தசைசிதைவு நோயிக்கான ஆராய்ச்சி நிலையம் துவங்கி அதில் வெளிநாடுகளில் ஆராய்ச்சியில் உள்ள மருந்தை இங்கு இலவச பெற்று தர முயற்சி மேற்கொள்ள வேண்டும். வீடு மற்றும் வேலை வாய்ப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாதந்தோறும் உடல் பரிசோதித்து முகாம் நடத்தி அதன் மூலம் ஹோமியோபதி சித்தா ஆயுர்வேதம் யுனானி நாட்டு மருந்து போன்றவற்றை இலவசமாக பெற்று தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.