சிறுமியை கடத்தி திருமணம் சிறுவன் போக்சோவில் கைது

முஷ்ணம், ஏப்.25: முஷ்ணம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த 21ம் தேதி இரவு 10 மணியளவில் பழைய வீட்டில் இருந்து புதிய அம்பேத்கர் தெருவில் உள்ள மாடி கட்டிடத்திற்கு தனது பெற்றோருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் பின்னால் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த நெடுஞ்சேரி பட்டறை தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் அந்த சிறுமியை இருசக்கர வாகனத்தில் தூக்கிச்சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் முஷ்ணம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். நேற்று நாச்சியார்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா, மதுபாலன், முஷ்ணம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஏழுமலை ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொண்டபோது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த  சிறுவனை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

Related Stories: