×

சிவகங்கை மாவட்ட தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஏப். 22: சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 2022-2023ம் கல்வியாண்டில் ஆர்டிஇ சட்டம் 2009ன்படி, குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் 150 பள்ளிகளில் 1,844 இடங்களுக்கு இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளிகளின் நுழைவுநிலை (எல்.கே.ஜி) வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கை மேற்கொள்ளலாம். rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் பள்ளிகள் வாரியாக இட ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் வட்டாரக்கல்வி அலுவலகங்கள், வட்டாரவள மையங்கள், தமிழக அரசின் இசேவை மையங்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 18.05.2022 வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது சமீபத்தில் எடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பெற்றோர் ஆதார் அட்டை மற்றும் அனைத்தின் நகல்கள் எடுத்து செல்ல வேண்டும்.

பள்ளிக்கும் குழந்தை வசிக்கும் வீட்டிற்கு இடையே உள்ள தூரம் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். நலிவடைந்த பிரிவினர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் ஆதரவற்றோர், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்கள், தூய்மை பணியாளரின் குழந்தை, மாற்றுத்திறனாளி குழந்தை ஆகியயோர் உரிய சான்றிதழுடன் முன்னுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தந்தை, தாயின் அலைபேசி எண் குறிப்பிட வேண்டும். மாணவ, மாணவிகள் சேர்க்கை குலுக்கல் நடைபெறும் 23.05.2022 ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivagangai district ,
× RELATED போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம்...